கூந்தல் வாசம்... !!!!காதல் வயப்பட்டால் என்ன ஆகும் என்று எல்லோருக்கும் தெரியாவிட்டாலும் காதலன்கள்( ‘ன்’கள்தான் மரியாதையே வேண்டாம் அந்த அளவு டார்ச்சர்) நண்பர்களுக்கு கொடுக்கும் டார்ச்சர்கள் கொஞ்சநஞ்சமல்ல என்பது ஓரளவு தெரிந்திருக்கும்.

“ கை என்னா ஜில்லுன்னு இருக்கும் தெரியுமா மாப்ள.. ஐஸ்கட்டி மாதிரி”


இவர்களிடம் தர்க்கமே பண்ணக்கூடாது..மாறாக “ஐஸ் கட்டி மாதிரி இருந்தா ரொம்ப நேரம் பிடிக்க முடியாதே மாப்ள”என்று சொல்லிப்பாருங்கள். பேசுவதை நிறுத்திவிடுவார்கள்.


அதாவது, எதனோடும் ஒப்பிட்டு,ஆனாலும் அதைவிட அந்த காதலியின் அழகுதான் உயர்ந்தது என்பதில் உறுதியாய் இருப்பார்கள்.
“என்ன வேணா சொல்லு, உலகத்துலயே அப்படி ஒரு ஸ்வீட் வாய்ஸ் இருக்காது..ச்சான்ஸே இல்ல..பேசினா கேட்டுக்கிட்டே இருக்கலாம்”


“என்னத்தயாவது சொல்லு.. அப்ப பாடகியா இருக்குறவங்களவிட உன்னோட ஆள் வாய்ஸ் ஸ்வீட்டா? நீ இந்த ஊரவிட்டுத் தாண்டுனது இல்ல..உலகத்துலயே என்ன உலகத்துலயே??”

“உனக்கு என்னடா தெரியும்..” என்று நட்பை முறித்துவிடுவார்கள்..எவள் குரலுக்காவோ நம் குரல்வளை ஒதுங்கும்..


அவங்கங்க ஆளுன்னா அப்படித்தான்.. சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கவேண்டும்..
ஒரு பெண்ணின் கூந்தல் வாசம் பற்றி பாடிய சிவனை, நான் மேலே சொன்ன நண்பனைப் போல நக்கீரர் “எவன் சொன்னது”..என்ற ரேஞ்சில் எதிர் கேள்வி கேட்டு பொசுங்கிப் போனது கீழ்வரும் இந்தப் பாடல் மூலம் தான்..
ரசனையான ஆளாக இருந்தால் இந்த வரிகள் மிகப் பிடிக்கும்..

 
விளக்கம்..

“அங்கும் இங்குமாய் தேடித்தேடி தேன் பருகும் வண்டே, நீ பார்த்தவற்றை மறைக்காமல், பொய் சொல்லாமல் சொல். மயிலைப் போல அழகான,வரிசையான பற்களை உடைய, அந்தப் பெண்ணின் கூந்தலில் இருந்து வரும் நறுமணத்தைவிட அதிக வாசனை உள்ள மலரை நீ பார்த்திருக்கிறாயா என்று சொல்”

இங்கு சிறப்பு என்பது.. ஒரு பொருளைப்பற்றிய தெளிவான கருத்தை, அந்த பொருளை பற்றி நன்கு அறிந்தவர்களிடம் கேட்பது என்பதே..

மலர்களின் வாசம் என்பது மலர்விட்டு மலர் தாவும் வண்டு மட்டுமே நன்கு அறியும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இங்கு தலைவியின் கூந்தல் மணம் எந்த மலரின் வாசத்தையும் விட சிறந்தது என்பதை கேட்க,வண்டை உபயோகித்திருப்பது புலவரின் புத்தியின் யுக்தி.அந்தப் பாடல்

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது,கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,

செறி எயிற்று,அரிவை கூந்தலின்

நறியவும் உளவோ, நீ அறியும் பூவே.(காமம் செப்பாது: பொய் சொல்லாது, எயிற்று: பல், அரிவை:பெண், நறியவும்:வாசனை( நாற்றம்:வாசனை.)

தலைவனின் கூற்றாக குறிஞ்சித்திணையில் இறையனார் இயற்றியது என்பதை விட ஏ.பி.நாகராஜன் என்ற இயக்குனரால் “திருவிளையாடல்”படம் மூலம் புகழ் பெற்றது என்று கூறினாலும் தப்பில்லை.

2 மறுமொழிகள் to கூந்தல் வாசம்... !!!! :