பேருந்துக் காதல்..! - (தொடர் பதிவு)

ண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். தொடர் பதிவு எழுதிட இங்கு என்னை அழைத்த நண்பர் சங்கவி அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

பேருந்துகள் எத்தனையோ கதைகளையும், சுமைகளையும், தினம் தினம் அரங்கேற்றும் ஒரு நாடகப்பட்டறை. எத்தனை எத்தனையோ நிழல்கள் நிஜங்களாகவும், நிஜங்கள் நிழல்களாகவும் மாறும் ஓவியக்கூடம்...!பலதரப்பட்ட மனிதர்களை சுமந்து சென்றாலும் சேற்றில் பூத்த செந்தாமரையாய் காதலும் அங்கே பூக்கத்தான் செய்கிறது. பல காதல் தோற்றாலும் சில காதல் மட்டும் ஜெயித்து வெற்றிநடை போடுகிறது.
காலையிலோ, மாலையிலோ ஓர் ஓரமாய் உட்கார்ந்து உன்னிப்பாக பார்த்தால் சலனமே இல்லாத முகங்கள்..! கவலை தோய்ந்த முகங்கள்...! மகழ்ச்சியான முகங்கள்...! பரபரப்பாய் சில முகங்கள்..! இவற்றிற்கு நடுவே காதல் பூத்த முகங்கள் மட்டும் வித்தியாசமாய் தெரியும்..! வெயிலில் வாடி, வேர்வையில் தோய்ந்துவிட்ட போதிலும் கூட... அப்படி ஒரு பிரகாசம்...! காதல் என்னும் ரசாவதத்திற்கே உரிய சிறப்பு அது.!
அது சரி, அதில் கூட பலவகை, வென்றுவிட்ட காதல்களும்..! வெல்லப்போகும் காதல்களும்..! வெல்லுமா..? எனத்தெரியாத காதலுமாய்.. களை கட்டும் பேருந்து...! காதல் பார்வைகளும் பலவிதம் என அங்கு தான் கண்டு கொண்டேன்..! கடைக்கண்ணில் காதல் ரசம் சொட்டும் பார்வைகள்..! முறாய்ப்புப் பார்வைகள்..? செருப்பு வருமா..? சிரிப்பு வருமா..? என்று தெரியாத பார்வைகள்.... பயம் கலந்த பார்வைகள் என பலவகை....

இதெல்லாம் முதற்கட்டம் (ஸ்ஸ்..அப்பாடா இன்னும் இருக்கிறதா..? என திட்டுவது கேட்கிறது.. என்ன செய்ய இருக்கிறதே!)

வையெல்லாம் தாண்டி பச்சை கொடி காட்டி ஜெயித்த காதல் இருக்கிறதே... இருவர் முகத்திலும் காதல் வழிகிறதோ.. இல்லையோ.. அசடுமட்டும் நன்றாக வழியும். ஸ்பீட் ப்ரேக் போட மாட்டர்களா..?  என்று மனதுக்குள் ஏங்கினாலும் விலகியே நிற்பதாய் பாவனை வேறு! இங்கு ஊடல்களும் அவ்வப்போது தோன்றும் குட்டிக் கவிதையாய்...!

அட , யாரவர்கள் ? காதலர்போல் தெரிந்தாலும் எதிர் எதிர் ஓரங்களில் ...கண்கள் மட்டும் கதை பேசியவாறு....

ல்லோர் வாழ்விலும் ஏதோ ஒரு பருவத்தில் ஒருகாதல் முதன் முதலில் கதவை தட்டி விட்டு போகும் ..சில காதல் தொடர்கதையாய்....பலகாதல் விடுகதையாய் ஆகிவிடும் .ஆனாலும் அந்த உணர்வு மட்டும் அப்படியே பசுமரத்து ஆணியாய் ஆழப் பதிந்துவிடும்.அப்படி என் வாழ்விலும் ஒரு தருணம்...அதை உணர நீங்களும் பதினைந்து வருடம் என்னோடு பின்னோக்கி பயணிக்க வேண்டும்.வருகிறீர்களா?

மக்கு ஏதோ ஒன்று பழக்கப்பட்டு போய்விட்டால் பிரிய மனம் வராது.அது எத்தகைய விடயமாயினும் சரி .அப்படித்தான் எனக்கு அந்த பேருந்தும் ஏனோ பிடித்து போயிற்று.தினமும் அதே பேருந்தில் தான் என் பயணம்.அதில்வரும் முகங்களும் பழக்கபட்டதாய் ஏதோ ஒரு அன்னியோன்யம்.என்னவாயிற்றோ தெரியவில்லை சில நாட்களாக அந்த பேருந்து வருவது நின்றுவிட்டது.அன்றும் காத்திருந்து காத்திருந்து கடைசியில் ஏமாற்றத்துடனும் பாடசாலைக்கு செல்லவேண்டும் என்ற கட்டாயத்தினாலும் புன்னகையை தொலைத்துவிட்ட மலராய் அதே வழியில் செல்லும் வேறொரு பேருந்தில் என் பயணம் தொடங்கியது.
ந்த பேருந்து பயணம் என் வாழ்வில் மறக்கமுடியாத ஒன்றாக மாறப்போவது தெரியாது ஒரு விசனத்துடன் பயணித்து கொண்டிருந்தபோதுதான் முதன்முதலில் அவளை பார்த்தேன். சில்லறை சிதறி விழுந்தாற்போல் அவள் புன்னகை... நெடுநேரம் சிரித்துக்கொண்டும் தோழிகளுடன் கதைபேசிக்கொண்டும் இருந்தாள்.என்னுள் ஏதோ படபடப்பு...அத்தனை கூட்டத்திலும் அவள் அருகில் செல்ல என் குட்டி இதயம் அடம் பிடித்தது.


ருவாறு கூட்டத்தை நெட்டி தள்ளி கோவப்பார்வைகளையும் முணு முணுபுக்களையும் அலட்சியம் செய்தவாறே அவள் அமர்ந்து இருக்கும் இருக்கைக்கு அருகில் சென்றேன். இன்னும் ஓயவில்லை அவள் சிரிப்பு. பேரழகி என்று சொல்ல முடிய விட்டாலும் அனைவரையும் கவரக்கூடிய அழகு. அவள் அருகில் ..யாரிவன்? திடுக்கிட்டது மனது. நெருங்கி உட்கார்ந்து இருந்த விதம் ஏதோ உறவொன்றை சொல்லியது. அந்த உறவு அவளுக்கு அண்ணனாக இருக்க வேண்டுமென வேண்டியது என் மனம். குலதெய்வத்தின் உருவம் கூட என் மனக் கண்ணில் வந்து போனது .என் வேண்டுதல்கள் பூரணமாகும் முன்னரே அவளருகில் இருந்த ஒரு பெண் அவள் பெயரை சொல்லி அழைத்து "ஏய்,,என்ன உன் லவர் உன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு ஏதும் பேசாமலே வருகிறாரே?" என்று கேட்டாள். அந்த ஒரு கேள்வியிலும் அந்த பெண்ணின் முகத்தில் தெரிந்த வெட்கப் புன்னகையிலும் அப்பொழுதுதான் அவசரமாய் கட்டிக்கொண்டிருந்த அழகிய காதல் கோட்டை அடுக்கி வைத்த சீட்டுக்கட்டாய் நிலைகுலைந்து போயிற்று.
நான் இறங்கும் தரிப்பிடம் வந்தது; ஒரு சிலமணி நேரத்திலேயே உதித்து , மரித்த காதலுடன் கடைசியாய் அவளை ஒருதடவை திரும்பி பார்த்துவிட்டு இறங்கினேன் அந்த பேருந்தை விட்டு.மறுநாள் வழமை போல் நான் செல்லும் பேருந்து வரத் தொடங்கியது.ஆனாலும் என்னவோ அவள் நினைவு அடிக்கடி எனக்கு ..அந்த செந்தாமரை முகமும் கிண்கிணிச்சிரிப்பும் என் நினைவுகளை அடிக்கடி தீண்டிச் சென்றது.

நாட்கள் உருண்டு வருடங்களாகின. ஆண்டுகள் மூன்று கடந்து சென்றது.
நான் கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்துகொண்டு இருந்த சமயம். வழமைபோல "நுனிப்புல் மேய்வதுபோல்" அன்றைய திகதி பத்திரிகையை புரட்டி கொண்டு இருந்தேன். அப்போது அதில் ஒரு செய்தியை பார்த்ததும் அப்படியே ஸ்தம்பித்துப் போய் விட்டேன்.ஆச்சரியம் மேலிட பூரணமாக அந்த செய்தியை படிக்க தொடங்கினேன் .அது என்னவாக இருக்கும் என ஊகிக்க முடிகிறதா உங்களால்? இல்லை அறிய ஆவலாக உள்ளதா? சொல்கிறேன்.

ன்றைய செய்தித்தாளின் தலைப்பு "கண் பார்வை அற்ற ஒரு மாணவி தான் காதலனின் உதவியுடன் பிளஸ் டூ தேர்வில் மாநிலத்திலேயே முதலாம் இடத்தில் வந்துள்ளாள்" .புகைப்படத்துடன் வைத்திருந்த அந்த செய்தியில் அந்த புகைப்படத்தில் இருந்தது வேறு யாருமல்ல.. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நான் பஸ்ஸில் பார்த்த அதே பெண். அந்த புன்னகை மாறாமலே.... அப்போதுதான் நான் தெரிந்து கொண்டேன் அவள் பார்வை இல்லாத ஒரு பெண் என்று. இப்போது புரிகிறதா..? என் அதிர்ச்சியின் காரணம்?

அன்றுமுதல் இன்றுவரை ஒவ்வொரு பேருந்து பயணத்திலும் யாராவது எதார்த்தமாக சிரித்தாலோ..! யாராவது ஒரு பெண்ணின் அருகில் ஒருவர் அமர்ந்து இருந்தாலோ..! என்னை அறியாமல் சிறிது நேரம் அவர்களை இமைக்காமல் பார்த்துக்கொண்டே  இருப்பதும்ஏதோ இழந்தாவனாய் இறங்கி செல்வதும்  வாடிக்கையாகிவிட்டது.
மேலும், இது போன்று இன்னும் எதனையோ பேருந்தில் ஏற்பட்ட காதல் அனுபவங்கள் ஒவ்வொன்றும் ஒரு புதுமையுடன் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இருக்கும் என்பதை நான் நன்றாக அறிவேன் . ஆனால் இன்று ஏதோ சில தவிர்க்க முடியாத காரணங்களால் சிலரால் பெருந்துகளில் பயணிக்கும் வாய்ப்புகள் இல்லாமல் போனாலும் . அவர்களின் கடந்த கால பேருந்து காதல் நினைவுகள் நிச்சயம் பயணித்துக் கொண்டுதான் இருக்கும் .அனைவரையும் தொடருக்கு அழைக்க ஆசைதான். நான் இப்போது இப்பதிவு குறித்து தொடர்பதிவு எழுதிட கீழ்கண்ட 10 நண்பர்களை நட்புடன் அழைக்கின்றேன் உங்களின் காதல் நினைவுகளை மறைவின்றி இந்த தொடர் பதிவின் வாயிலாக பகிந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
நீங்கள் ஒவ்வொருவரும் நண்பர்களை அழைக்க வேண்டுகிறேன்.


 இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

67 மறுமொழிகள் to பேருந்துக் காதல்..! - (தொடர் பதிவு) :