ஞாபகத் தூறல் - காதல் கவிதைகள் > Panithuli shankar Tamil New Kadhal Kavithaigal


கொட்டும் மழைக்குள்
ஒற்றைக் குடைக்குள்
ஓயாத அடை மழையென
உன் நினைவுகள்..!

சுற்றும் பூமி நிற்கும்போதும்
மறக்காத சுவாசமாய்
உன் ஸ்பரிசம்..!

மழை நின்று போனது
நீயும் நானும்
பிரிந்துசெல்ல மனமின்றி
பிரிந்து சென்றோம்.!.

காலங்கள் கடிவாளங்கள் இல்லாத
குதிரையாய் கால் போகும்
திசை எங்கும் ஓடிப்போனது..!

ஒரே மூச்சில் வாசித்து முடிக்கப்பட்ட
புத்தகத்தின் பக்கங்களாய்
பத்து ஆண்டுகள்
சத்தமின்றி கழிந்து போனது..!
இன்னும் இளமை மாறாமல்
அதே புன்னகையோடு எப்பொழுதும்
தலையசைக்கும் மரங்கள்..!

மண்ணைக் கட்டிக்கொண்டு
இன்னும் நமக்காய்
காத்துக் கிடக்கும் உறவுகளாய்
பார்க்கும் திசை எங்கும்
பச்சை நிறத்தில் புற்கள்..!

இன்னும் பழமை மாறாமல்
அதே பொலிவுடன் அந்த இடம் .
இதோ அதே மழை
அதே ஒற்றைக் குடை
ஆனால் நீ அருகில் இல்லை..!

வெகு நேரம் காத்துக் கிடந்தேன்
நீ வரவில்லை .
அன்று உன்னையும் என்னையும்
ஒன்றாய் நனைத்த
இந்த மழையில் இன்று நான் மட்டும்
தனிமையில் நனைகிறேன்...!

உன் நினைவுகளுடன்
நான் கடந்து செல்லும்
ஒவ்வொரு இடங்களிலும்
மழை நின்றபின்னும்
தூறிக்கொண்டிருக்கிறது
உன் ஞாபகங்கள் மட்டும்..!


                            - பனித்துளிசங்கர்
 

20 மறுமொழிகள் to ஞாபகத் தூறல் - காதல் கவிதைகள் > Panithuli shankar Tamil New Kadhal Kavithaigal :